சொந்த நிலமோ அல்லது வீடோ வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு. ஆனால், கிரயப் பத்திரம் முடிந்து கைக்கு வந்துவிட்டாலே அந்தச் சொத்து முழுமையாக நமதாகிவிட்டது என்று கருதுவது மிகப்பெரிய தவறாகும். பத்திரப் பதிவு என்பது ஒரு பரிமாற்றம் மட்டுமே. அந்தச் சொத்தின் மீது அரசு அங்கீகரிக்கும் உண்மையான உரிமையைப் பெற பட்டா மாறுதல் (Patta Transfer) செய்வது மிக அவசியமான இறுதி கட்டமாகும். வருவாய்த் துறை ஆவணங்களில் உங்கள் பெயரைப் பதிவு செய்வது மட்டுமே எதிர்கால சட்டச் சிக்கல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளில் இருந்து உங்கள் சொத்தைப் பாதுகாக்கும்.
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும்போது தேவையான ஆவணங்களை துல்லியமாக தயார் நிலையில் வைத்திருப்பது வேலையை எளிதாக்கும். நிலத்தின் மூல ஆவணங்களான கிரயப் பத்திரம், பாகப்பிரிவினை அல்லது தான செட்டில்மென்ட் பத்திரம் ஆகியவற்றுடன் ஆதார், பான் கார்டு மற்றும் முகவரிச் சான்றுகளை இணைக்க வேண்டும். ஒருவேளை வாரிசு அடிப்படையில் சொத்து கைமாறுகிறது என்றால், வாரிசுச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ் கட்டாயமாகும்.
தற்போது தமிழக அரசு இந்த சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. பொதுமக்கள் https://eservices.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ எளிதாக விண்ணப்பிக்கலாம். ண்ணப்பித்த பிறகு, சிட்டா மற்றும் ஏ-பதிவேட்டில் (A-Register) பெயர் மாற்றம் சரியாகப் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, நிலத்தின் வரைபடமான எஃப்.எம்.பி-யில் (FMB) உட்பிரிவுகள் (Sub-division) மற்றும் எல்லைக் கோடுகள் சரியாகக் குறிக்கப்பட்டுள்ளதா என்பதை கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) சரிபார்ப்பது காலத்தின் கட்டாயம்.
சொத்து வாங்கிய கையோடு பட்டா மாறுதலையும் முடித்துவிட்டால், வங்கிக் கடன் பெறுவதற்கோ அல்லது பிற்காலத்தில் அந்தச் சொத்தை மறுவிற்பனை செய்வதற்கோ எந்தத் தடையுமிருக்காது. முறையான ஆவணப் பராமரிப்பே உங்கள் உழைப்பின் சொத்திற்கு உண்மையான பாதுகாப்பு.



