வைகை புயல் என்று தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் வடிவேலு காமெடி உலகத்தில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். விஜய்காந்த் உடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, திமுக மேடைகளில் விஜயகாந்திற்கு எதிராக பேசினார். இதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்த சூழலில் ஒருகட்டத்தில் வடிவேலுவை திரையிலேயே காண முடியவில்லை.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் நடித்த மாமன்னன் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் போது வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட சம்பவம் குறித்து கலைப்புலி எஸ். தாணு ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1993ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் ராதிகா, விஜயகுமார், நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதில் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்தார், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார்.
அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த வடிவேலு, தாணு பெரும் செலவில் தயாரித்துவரும் படத்தை கண்டு, “எனக்கும் 25,000 ரூபாய் சம்பளம் வேண்டும்” எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட பாரதிராஜா அதிர்ச்சி அடைந்து, “சம்பளத்தை கொஞ்சம் குறை” என கேட்டாராம். ஆனால், வடிவேலு “முடியாது” என உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த பாரதிராஜா, “நீ இந்தப் படத்தில் நடிக்கவே வேண்டாம்.. கிளம்பு!” என்று கூறி விரட்டியதாக தாணு பின்னர் ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஷயம் தயாரிப்பாளர் தாணுவின் காதுகளுக்கு சென்றது. அவர் உடனே வடிவேலுவை அழைத்து, “சம்பள விஷயம் என்கிட்ட தான் பேசணும்; இயக்குநரிடம் ஏன் போய் கேட்ட?” எனக் கூறி, வடிவேலு கேட்ட சம்பளத்தையும் வழங்கி, படத்தில் அவரை நடிக்க வைத்தாராம். இந்த ‘கிழக்கு சீமையிலே’ படமே வடிவேலுவின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
Read more: ரூ.2,40,000 வரை சம்பளம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. B.E படித்தவர்களுக்கு செம சான்ஸ்..!!