மத்திய – மாநில அரசுகள் இணைந்து பொது விநியோக திட்டத்தில் பெரும் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரேஷன் விநியோகத்தில் முறைகேடுகளை தடுத்து, தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், வரும் ஏப்ரல் 1 முதல் இந்த விதிமுறைகள் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன.
புதிய விதிகளின்படி, ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் ‘மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பை’ (e-KYC) முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு பிப்ரவரி 28, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று கைரேகை பதிவு மூலமாகவோ அல்லது ‘மேரா ரேஷன்’ (Mera Ration) மொபைல் செயலி வாயிலாக முக அங்கீகார முறையைப் பயன்படுத்தியோ இந்த சரிபார்ப்பைச் செய்துகொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் இதை முடிக்கத் தவறினால், மார்ச் 1 முதல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யார் தகுதியற்றவர்கள்..?
குடும்பத்தில் யாராவது வருமான வரி (Income Tax) செலுத்துபவராக இருந்தாலோ அல்லது டிராக்டர் தவிர்த்து இதர நான்கு சக்கர வாகனங்களை வைத்திருந்தாலோ அவர்களின் கார்டுகள் ரத்து செய்யப்படும். மேலும், தொடர்ச்சியாக 3 மாதங்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்காத பயனாளிகளின் பெயர்களும் பட்டியலில் இருந்து நீக்கப்படும். டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்த டிஜிட்டல் சரிபார்ப்புப் பணிகள் ஏற்கனவே முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
பயனாளிகளுக்கு புதிய வசதி :
கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பணி நிமித்தமாக அடிக்கடி கடைக்கு வர இயலாதவர்களுக்காக, மூன்று மாதங்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி சில மாநிலங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் மாற்றங்கள் ரேஷன் விநியோக முறையை இன்னும் வெளிப்படையானதாகவும், ஊழலற்றதாகவும் மாற்றும் என அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
Read More : சிலிண்டர் விலை முதல் பிஎஃப் பணம் வரை..!! மார்ச் 1இல் அதிரடி மாற்றம்..!! முக்கிய அப்டேட்ஸ் இதோ..!!



