தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ (PMEGP) ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. 2008-ஆம் ஆண்டு PMRY மற்றும் REGP ஆகிய திட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் சிறு, குறு நிறுவனங்களை நிறுவி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசு வழங்கும் தாராளமான மானியமும், வங்கிக் கடன் வசதியும் இத்திட்டத்தின் மிகப்பெரிய பலமாகும்.
இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி சார்ந்த தொழில்களை தொடங்க 25 லட்சம் ரூபாய் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலும் வங்கிக் கடன் பெற முடியும். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நகர்ப்புறப் பயனாளிகளுக்கு 25 சதவீதமும், ஊரகப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு 35 சதவீதமும் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு ஏதுமில்லை என்றாலும், உற்பத்தித் துறையில் 10 லட்சத்திற்கும், சேவைத் துறையில் 5 லட்சத்திற்கும் அதிகமான திட்ட மதிப்பீடு கொண்டவர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, பேக்கரி, அழகு நிலையம், ஆட்டோமொபைல் சர்வீஸ் சென்டர் மற்றும் மசாலா பொருட்கள் தயாரிப்பு போன்ற பல்வேறு தொழில்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இருப்பினும், அனைத்துத் தொழில்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது. குறிப்பாக, இறைச்சி விற்பனை, மது மற்றும் போதைப் பொருட்கள் சார்ந்த வணிகம், 20 மைக்ரானுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் தயாரித்தல் மற்றும் விவசாயம் சார்ந்த ஆடு, மாடு, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களுக்கு இத்திட்டத்தில் நிதியுதவி கிடையாது. மேலும், ஏற்கனவே அரசு மானியத்துடன் கடன் பெற்றவர்கள் அல்லது சாதாரண வியாபாரத் தொழில்கள் (மளிகைக் கடை போன்றவை) செய்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை, திட்ட அறிக்கை மற்றும் இயந்திரங்களுக்கான விலைப்புள்ளி ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்டத் தொழில் மையத்தை அணுகியோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் சிபில் (CIBIL) மதிப்பெண் 650-க்கு மேல் இருப்பதும், ஆவணங்களில் பெயர் மற்றும் முகவரி ஒரே மாதிரியாக இருப்பதும் விண்ணப்பம் விரைவாக ஏற்கப்பட உதவும். முறையான திட்டமிடலுடன் அணுகினால், இத்திட்டம் சாமானிய இளைஞர்களையும் வெற்றிகரமான தொழில் அதிபர்களாக மாற்றும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
Read More : நகைக்கடன் வாங்குபவர்களுக்கு குட் நியூஸ்..!! மத்திய பட்ஜெட்டில் வெளியாகப் போகும் மெகா அறிவிப்பு..!!



