கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக யார் இணைக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான பெண்கள் காத்திருக்கின்றனர். தகுதியான பயனாளிகள் நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்கலாம் என்ற காலக்கெடு உள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளவர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு :
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாகும். இதில் உள்ள தகவல்களில் பிழைகள் இருப்பது கள ஆய்வில் உறுதி செய்யப்பட்டால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதுடன், ரேஷன் கார்டு வைத்திருப்பதிலும் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
குறிப்பாக, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பலர் தங்கள் முகவரியை ரேஷன் கார்டில் மாற்றாமல் பழைய முகவரியிலேயே தொடர்ந்து வைத்திருப்பது கள ஆய்வின்போது தெரியவந்தால், முகவரியை மாற்ற அதிகாரிகள் அறிவுறுத்த வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் முன்பே முகவரி உள்ளிட்ட முக்கிய தகவல்களை சரியாக புதுப்பிப்பது நல்லது. முகவரியை மாற்றாமல் விண்ணப்பிப்போர் நடைமுறை சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
வருமானம் மற்றும் தகுதிகள் :
குடும்ப வருமானம் குறித்த தகவல்களை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் விசாரணையின் போது கண்டறியப்பட்டால், அவை உடனடியாக நிராகரிக்கப்படும். அதேபோல், குடும்பத்தில் யாரேனும் அண்மையில் அரசுப் பணியில் சேர்ந்திருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் விண்ணப்பித்திருந்தாலும் அவர்களது விண்ணப்பங்களும் தள்ளுபடி செய்யப்படும். அரசின் அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும், நிரந்தர முகவரியில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே ரூ.1000 உரிமைத் தொகை கட்டாயம் கிடைக்கும்.
வங்கி மற்றும் மொபைல் எண் அவசியம் :
விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க, பெண்கள் தங்கள் ரேஷன் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை சரியாக கொடுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காகக் கொடுக்கப்படும் மொபைல் எண் கட்டாயம் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மொபைல் எண் அல்லது வங்கிக் கணக்கு தகவலில் தவறு இருந்தால், நீங்கள் திட்டத்தில் சேர்க்கப்பட்டது பற்றியோ அல்லது பணம் வரவு வைக்கப்பட்டது பற்றியோ தகவல் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இந்த முக்கிய அம்சங்களை சரிபார்த்தால், உரிமைத் தொகையை பெறுவதில் எந்த தடையும் இருக்காது.