சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் என்பவரது மகள் திரிஷா (20). இவரும் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த ராபின் (22) என்ற வாலிபரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்த நிலையில், அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, திரிஷாவும் ராபினும் வேப்பேரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது இருவருமே உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், கோபத்தில் வெளியேறிய ராபின், அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த திரிஷா, அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்துத் திரும்பிய ராபின், திரிஷா தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பிறகு, திரிஷாவின் தோழிக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாகக் கூறியுள்ளார். பின்னர், தோழி அளித்த தகவலின் பேரில், திரிஷாவின் பெற்றோர் லாட்ஜுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, லாட்ஜ் ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, திரிஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். ராபினும் செங்குன்றத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இருவரது காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், அவர்கள் இருவரும் ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தார்கள் என்பது மர்மமாகவே உள்ளது. லாட்ஜ் அறையில் என்ன நடந்தது என்பது குறித்து இருவரின் செல்போன் உரையாடல்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரமும் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இரு குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.



