டிஜிட்டல் யுகத்தின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள், இன்று ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் குடும்பத்திற்கு ஒன்று என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலை மாறி, இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் ஒரு ஸ்மார்ட்போனுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. சர்வதேச சந்தையைப் போலவே இந்திய மொபைல் சந்தையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் (iOS) மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரண்டு இயங்குதளங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஆப்பிள் போன்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவின் பெரும்பான்மையான நடுத்தர வர்க்க மக்கள் ஆண்ட்ராய்டு போன்களையே தங்களின் முதல் தேர்வாகக் கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்களை (Security Updates) வழங்கி வரும் கூகுள் நிறுவனம், தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, இனி வரும் காலங்களில் ‘ஆண்ட்ராய்டு 12’ (Android 12) அல்லது அதற்கு முந்தைய பழைய பதிப்புகளில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு கூகுள் நிறுவனம் எந்தவிதமான பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்கப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம் வளர வளர சைபர் குற்றவாளிகளின் கைவரிசையும் அதிகரிப்பதால், பழைய இயங்குதளங்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடும் அபாயம் அதிகம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காகவே புதிய அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.
கூகுளின் இந்தத் திடீர் அறிவிப்பால், பழைய மாடல் போன்களைப் பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் திருடப்படாமல் இருக்க வேண்டுமானால், உடனடியாக உங்கள் போனில் மென்பொருள் அப்டேட் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். ஒருவேளை உங்கள் போன் ஆண்ட்ராய்டு 12-க்கு பிந்தைய பதிப்புகளுக்குச் சப்போர்ட் செய்யவில்லை என்றால், பாதுகாப்புக் கருதி புதிய போனுக்கு மாறுவதே சிறந்தது என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.



