பொதுவாக கேமரா அல்லது மைக்க்ரோஃபோன் (mic) ஆந்ல் இருந்தால் தான் ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்க முடியும் என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.. ஆனால், இது ஒரு தவறான நம்பிக்கை என்று ஐஐடி–டெல்லி (IIT-Delhi) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், ஸ்மார்ட்போன்களின் ஜிபிஎஸ் (GPS) அமைப்பு வெறும் இடம் (location) மட்டுமல்லாமல், அதன் சுற்றுப்புறச் சூழலையும், உங்கள் இயக்கத்தையும், கூடத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் கண்டறிய முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர்..
ஜிபிஎஸ் சென்சார்களின் குறுக்கீட்டுகள் மற்றும் பிரதிபலிப்பு அலைகளின் (reflected signals) மூலம், ஸ்மார்ட்போன் உங்கள் உடல்நிலை — நீங்கள் நின்றிருக்கிறீர்களா, உட்கார்ந்திருக்கிறீர்களா, அல்லது படுத்திருக்கிறீர்களா — என்பதையும் கண்டறியக்கூடிய திறனை கொண்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் இந்த ஆய்வில் வெளியாகி உள்ளது..
இந்த ஆய்வு, தனியுரிமை (privacy) பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இடம் பின்தொடர்வதற்கே அல்ல, உங்கள் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றிய நுண்ணறிவையும் சேகரிக்கக்கூடும் என்பதால், நிபுணர்கள் “அதைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளனர்.
ஐஐடி–டெல்லி (IIT-Delhi) ஆய்வின் படி, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் உள்ள ஜிபிஎஸ் (GPS) மூலம் சேகரிக்கப்படும் “மைக்ரோஸ்கோபிக் தரவு (microscopic data)” வெறும் இடத் தகவலை (location) மட்டுமல்லாமல், அதைவிட ஆழமான விபரங்களையும் வெளிப்படுத்தக்கூடியது என தெரியவந்துள்ளது.
அதாவது, ஜிபிஎஸ் மூலம் ஒருவர் எங்கு இருக்கிறார் என்பதையே அல்ல, அவர் எப்படி நகர்கிறார், அவர் இருக்கும் சூழல் எப்படி உள்ளது, அவர் இருக்கும் அறையின் நிலைமை (room condition) என்ன என்பதையும் மறைமுகமாக அறிய முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு “AndroCon: An Android Phone-Based Sensor for Ambient, Human Activity, and Layout Sensing Using Fine-Grained GPS Information” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ACM Transactions on Sensor Networks என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் இதன் மூலம், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வெறும் வழி காட்டும் கருவி அல்ல; அது மனித இயக்கம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய நுண்ணறிவை (fine-grained intelligence) வழங்கும் சக்தி வாய்ந்த கருவி என்றும் எச்சரித்துள்ளனர்.
கேமரா அல்லது மைக் இல்லாமலேயே ‘உளவு கருவியாக’ மாறும் ஸ்மார்ட்போன்!
ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள “AndroCon” என்ற புதிய அமைப்பு (system), ஜிபிஎஸ் (GPS) மூலம் நுண்ணிய தரவுகளை (fine-grained data) பயன்படுத்தி மறைமுக சென்சராக (covert sensor) செயல்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு செயலிகளுக்கு வழங்கப்படும் “precise location permission” என்ற அனுமதி மூலம் கிடைக்கும் மிகத் துல்லியமான ஜிபிஎஸ் தகவல்களைப் பயன்படுத்துகிறது.
ஒருவரின் இயக்கங்களைப் பதிவு செய்ய கேமரா, மைக் அல்லது மோஷன் சென்சர் தேவைப்படும் என்று இதுவரை நாம் நினைத்திருந்தோம்.. ஆனால் AndroCon இதை முழுமையாக மாற்றியுள்ளது. இந்த அமைப்பு வெறும் ஜிபிஎஸ் அலைவரிசை (GPS signals) தொடர்பான நுண்ணிய கூறுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்து, ஒருவர் உக்காரியிருக்கிறாரா, படுக்கையிலா இருக்கிறாரா, மெட்ரோவில் அல்லது விமானத்தில் பயணம் செய்கிறாரா, பூங்காவில் நடக்கிறாரா, அல்லது நெரிசலான இடத்திலா இருக்கிறார் என்பதையும் கண்டறிய முடியும்.
இதன் மூலம், கேமரா அல்லது மைக் தேவையில்லாமல் ஒரு சாதாரண மொபைல் போனே மறைமுக உளவு கருவியாக (spy device) மாறக்கூடும் என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
கேமரா, மைக் ஆப் ஆனாலும் உங்களை “அறியும்” ஸ்மார்ட்போன்!
ஐஐடி டெல்லியின் ஆய்வில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. நீங்கள் கையால் போனின் அருகில் அசைத்தாலும் கூட, அந்த இயக்கத்தையும் AndroCon அமைப்பு கண்டறிய முடியும்! அதாவது, கேமரா மற்றும் மைக் அணைந்திருந்தாலும், உங்கள் போன் உங்கள் சுற்றுப்புற சூழலையும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதையும் கண்டறிய முடியும் என்பது இதன் பொருள்.
இந்த ஆய்வை முன்னெடுத்த IIT-Delhi பேராசிரியர் ஸ்மிரிதி ஆர். சரங்கி (Prof. Smriti R. Sarangi) பேசிய போது “இந்த ஆராய்ச்சி ஒரு வருடம் முழுவதும் நடைபெற்றது. 40,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பல்வேறு மொபைல் போன் மாடல்களில் பரிசோதிக்கப்பட்டது,” என்று தெரிவித்தார்.
AndroCon அமைப்பு சுற்றுப்புற சூழலை 99% துல்லியத்துடன் (accuracy) கண்டறிந்தது. மனிதர்கள் செய்யும் இயக்கங்களை 87% துல்லியத்துடன் புரிந்துகொண்டது. இதன் மூலம், ஒரு சாதாரண ஜிபிஎஸ் சென்சர் கூட உயர்தர உளவு கருவி போல் செயல்படக்கூடும் என்பதைக் காட்டுகிறது. அதனால், நம் ஸ்மார்ட்போனின் அனுமதி அமைப்புகள் (permissions) எவ்வளவு முக்கியம் என்பதையும் இது வலியுறுத்துகிறது.



