கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு மறுத்ததால், கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹாவேரி மாவட்டம் சங்கரி கொப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து பரவன்னவர் (25). இவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சரத் நீலப்பா என்ற வாலிபரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தைகள் கூறி சிந்துவுடன் சரத் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதன் விளைவாக சிந்து கர்ப்பமான நிலையில், சரத் திடீரென அவரைத் திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிந்து, சரத்தின் தங்கையும் தனது கல்லூரி தோழியுமான காவியாவிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி முறையிட்டுள்ளார். ஆனால், காவியாவும் சிந்துவை திருமணம் செய்ய வலியுறுத்துவதற்கு பதிலாக, அவரைக் கடுமையாக மிரட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, சிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சிந்துவின் தற்கொலைக்கு காதலன் சரத் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டிய சிந்துவின் உறவினர்கள், போராட்டத்தில் குதித்தனர். மேலும், அவர்கள் சிந்துவின் உடலை எடுத்துச் சென்று சரத்தின் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உறவினர்களிடம் சமாதானம் பேசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிந்துவின் உறவினர்களின் புகாரைத் தொடர்ந்து, அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் சரத், அவரது தந்தை சுரேஷ், தாய், தங்கை காவியா மற்றும் உறவினர்கள் உட்பட மொத்தம் 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவான அவர்களைப் போலீஸார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Read More : கள்ளக்காதலிக்காக மொத்த பணத்தையும் செலவு செய்த ரியல் எஸ்டேட் அதிபர்..!! மகன் கண்முன்னே நடந்த பயங்கரம்..!!



