பாலியல் உறவுக்கு அழைத்தபோது வர மறுத்ததால், இளைஞரை திருநங்கை ஒருவர் அடித்தே கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 45). இவர், வீட்டை விட்டு வெளியேறி, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர், அப்பகுதியில் சடலமாக இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார், ஜான் பாஷாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, அப்போது அங்கு திருநங்கை ஒருவர் அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து, திருநங்கைகளிடம் விசாரணை நடத்திய போலீசார், குகன் என்ற திருநங்கையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.
சம்பவத்தன்று, ஜான் பாஷா குடிபோதையில் இருந்துள்ளார். மேலும், அவரது சட்டையில் பணம் அதிகம் வைத்திருந்துள்ளார். இதை கவனித்த திருநங்கை, ஜான் பாஷாவை பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், ஜான் பாஷா மறுத்துள்ளார். மேலும், திருநங்கையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த திருநங்கை, ஜான் பாஷாவை கடுமையாக தாக்கியுள்ளார். கழுத்து பகுதியில் தாக்கியதால் ஜான் பாஷா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, திருநங்கை குகன் என்கிற மலைக்காவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.