கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாபட்டி.
இந்த கிராமத்தின் சிறப்புகள் பற்றி ஒருவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களால் இணையத்தில் கூமாபட்டி ட்ரெண்ட் ஆனது. “ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனி ஐலேண்டு” என ஒருவர் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
“தமிழ்நாட்டிலேயே ஏன்.. உலகத்துலயே இந்த மாதிரி ஊர் இல்லைங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? கவலைப்படாதீங்க.. கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமிங்க இது” என நகைச்சுவை பாணியில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் கூமாபட்டி மாநில அளவில் ஃபேமஸ் ஆனது.
இந்த நிலையில் கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூமாபட்டியை சுற்றுலா தளமாக மாற்றும் நோக்கில் சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.