மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி(ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
மத்திய அரசு, ஆர்டிஇ திட்ட நிதியை சுமார் ரூ.600 கோடி வரை வழங்கப்படவில்லை. இதன்காரணமாக நடப்பு கல்வியாண்டில் (2025-26) தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர்டிஇ திட்டத்தின் தனது பங்களிப்பு நிதியை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது. ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; தனியார் பள்ளிகளில் நடப்பு 2025–26-ம் கல்வியாண்டுக்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகள் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு ஆர்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் பள்ளியின் முதல்வர்கள் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல், ஆர்டிகு தகுதியுடைய மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்தவகையில் பள்ளியின் நுழைவு வகுப்பில் இதுவரை சேர்க்கை பெற்ற குழந்கைளின் மொத்த எண்ணிக்கையை அக்டோபர் 7-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.அதில் ஆர்டிஇ சேர்க்கைக்கு தகுதியான மாணவர்களின் சான்றுகளை அக்.9-ல் பதிவுசெய்ய வேண்டும். தொடர்ந்து தற்காலிக தகுதிப் பட்டியல் அக்டோபர் 10-ம் தேதியும், இறுதிப்பட்டியல் அக்.14-ம் தேதியும் வெளியிடப்படும். மேலும், இடங்களைவிட அதிக மாணவர்கள் இருப்பின் குலுக்கல் அக்டோபர் 16-ல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



