அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிழவி வந்தது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார்.
அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன் பின்னர் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவருக்கு மரியாதை செய்ய ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.
அதுமட்டுமின்றி செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். செங்கோட்டையனின் இந்த செயல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருப்பூர் தொகுதியின் முன்னாள் எம்பியான சத்தியபாமா, ஈரோடு மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது.



