பலர் வீட்டில் கேமராக்களை பாதுகாப்பு காரணங்களுக்காகவே பயன்படுத்துகிறார்கள் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருப்பது போன்ற சூழலில் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த கேமராக்கள் பாதுகாப்பை கொடுக்க வேண்டிய இடத்தில், எதிர்பாராத முறையில், சட்டவிரோத உள்ளடக்கங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டது..
தென் கொரியாவில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள சுமார் 1,20,000 கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டு, அவற்றின் படங்களை திருடி, சட்டவிரோதமாக படமாக்கப்பட்ட பாலியல் சுரண்டல் (sexually exploitative) வீடியோக்கள் உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
தற்போது, இந்த வழக்கில் 4 பேரை தென் கொரியா போலீஸ் கைது செய்துள்ளது. இந்த சந்தேகத்திற்குட்பட்ட நபர்கள் தனித்தனியாக செயல்பட்டு, பல்வேறு இடங்களில் உள்ள IP கேமிராக்களை இலக்காகக் கொண்டிருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. இதில் ஸ்டுடியோக்கள், கரோக்கே அறைகள், ஒரு மகளிர் மருத்துவர் கிளினிக், மேலும் சில தனியார் வீடுகளும் அடங்கும்.
கைது செய்யப்பட்ட 4 பேரில், இருவர் மட்டுமே சர்வதேச அளவில் சட்டவிரோதமாக பாலியல் சுரண்டல் வீடியோக்களை பகிரும் இணையதளங்களில் வெளியான 60% க்கும் மேல் வீடியோக்களுக்கு பொறுப்பானவர்கள். சந்தேக நபர்களில் ஒருவருக்கு, 545 வீடியோக்கள் மூலம் $24,000 (சுமார் ₹20 லட்சம்) மதிப்புள்ள வருமானம் கிடைத்துள்ளது. மற்றொரு நபருக்கு, 648 வீடியோக்கள் மூலம் $12,000 (சுமார் ₹10 லட்சம்) வருமானம் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் வீட்டுப் பாதுகாப்பு கேமிராக்கள் ஹேக் செய்யப்பட்டால் எவ்வளவு பெரும் அபாயமாக மாறக்கூடும் என்பதை தெளிவாக காட்டுகிறது.
ஹேக் செய்யப்பட்ட கேமராவின் உற்பத்தியாளர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. திருடப்பட்ட வீடியோக்கள் விற்கப்பட்ட அனைத்து இணையதளங்களும் தற்போதைய விசாரணையில் உள்ளன. மேலும், திருடப்பட்ட வீடியோக்களை வாங்கியவர்களும், அதனை பார்த்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்..
அவர்களில் ஒருவர் மீது, குழந்தைகள் மற்றும் சிறுவர்–சிறுமிகளின் பாலியல் சுரண்டல் உள்ளடக்கத்தை உருவாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த குறிப்பிட்ட வீடியோக்கள் விற்கப்படவில்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
ஏன் இது நடந்தது?
இந்தப் பிரச்சனையின் முக்கிய காரணம் வீட்டில் பயன்படுத்தப்படும் IP கேமராக்களின் பலவீனமான பாதுகாப்பு முறைகள் தான்.
இது ஏன் ஆபத்தானது என்று பார்க்கலாம்:
பலவீனமான அல்லது எளிய கடவுச்சொற்கள்
மக்கள் பெரும்பாலும் “1234”, “admin”, “password” போன்ற எளிய கடவுச்சொற்களை வைத்திருக்கிறார்கள். வீட்டு கேமராவுக்கு இது பெரிதாகப் பிரச்சனை இல்லை என்று நினைப்பார்கள். ஆனால் ஒரு கேமரா ஹேக் ஆனால், உங்கள் தினசரி வாழ்க்கையே அந்நியர்களுக்கு தெரிந்து விடும். அதை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
குறைந்த விலையில் அதிகமாக பயன்படுத்தப்படும் IP கேமராக்கள்
IP கேமராக்கள் மலிவானவை என்பதால், வீடுகள், கடைகள், ஜிம், ஸ்டுடியோக்களில் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஹேக்கர்கள் தாக்கத் துணிந்தால், பல சாதனங்களை ஒரே நேரத்தில் உடைக்கலாம்.
பாதுகாப்பு புதுப்பிப்புகள் இல்லாமை
பல பிராண்டுகள் முறையான பாதுகாப்பு அப்டேட்களை வழங்காமல் இருக்கின்றன.
இதனால் கேமராவில் உள்ள பழைய குறைகள் ஹேக்கர்களுக்கான வாய்ப்பாகி விடுகிறது.
பயனர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு குறைவு
மக்கள் கேமரா நெட்வொர்க்கை பாதுகாப்பாக அமைப்பது, கடவுச்சொல்லை வலுவாக வைத்தல், இரட்டை பாதுகாப்பு அமைப்புகளை இயக்கல் போன்றவற்றை செய்யாமல் விடுகின்றனர்.
எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்?
வலுவான Password பயன்படுத்தவும்
“123456” அல்லது “admin” போன்ற எளிய passwords தவிர்க்கவும். password-ஐ அடிக்கடி மாற்றவும்.
மலிவு, தரமற்ற கேமராக்களை தவிர்க்கவும்
நம்பகமான பிராண்டுகளை மட்டும் தேர்வு செய்யுங்கள். சென்சிட்டிவ் இடங்களில் கேமரா வைக்க வேண்டாம்.. படுக்கை அறை, பாத்ரூம், குழந்தைகள் அறை போன்ற இடங்களைத் தவிர்க்கவும்.
கேமராவை தனி நெட்வொர்க்கில் வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் மொபைல்/லாப்டாப் இருக்கும் Wi-Fi க்கு தனியே இல்லாமல், ஒரு வேறு ‘guest network’ அல்லது தனி Wi-Fi பயன்படுத்தவும்.
சந்தேகமான செயல்பாடுகளை கவனிக்கவும்
திடீர் வீடியோ பதிவேற்றம், அறியாத IP-களிலிருந்து லாகின், கேமரா தானாக செயல்படுதல், இவற்றை உடனே சரிபார்க்கவும்.



