தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல ஆண்டுகளாக நிலவும் எல்லை விவாதம் மீண்டும் தாக்குதலாக வெடித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கம்போடியாவின் தா முயென் தோம் என்ற கோயிலருகே இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நடந்த இரகசிய தாக்குதலால் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்து ராணுவத்தின் F-16 போர் விமானங்கள் மூலமாக கம்போடியாவின் இராணுவ தளங்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக வான்வழியில் நடந்த தாக்குதலாகும். தாக்குதல் நடைபெற்ற இடங்களில் பலத்த வெடிப்பு, புகைமூட்டம் மற்றும் தீப்பிடிப்பு ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கம்போடியா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்களது இரு ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டு, 14 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பிறகு, எல்லை அருகிலுள்ள கிராமங்களில் இருந்த சுமார் 4,000 மக்கள் பீதி அடைந்து பாதுகாப்பான பகுதிகளுக்குப் பதுங்கியுள்ளனர். பலர் பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தாய்லாந்து மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் உறங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து அரசாங்கம், “கம்போடிய ராணுவம் தான் முதலாக தங்கள் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பிற்காகவே பதிலடி அளிக்கப்பட்டது” என தெரிவித்தது. இதற்கு பதிலளித்த கம்போடிய அரசு, “தாய்லாந்து திட்டமிட்டு தனது நிலத்தை மீண்டும் கைப்பற்ற முயல்கிறது. இது சர்வதேச சட்டத்திற்கே எதிரானது” என கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது: “இரு நாடுகளும் உடனடியாக ஆயுதங்களை விலக்கி, பேச்சுவார்த்தை மேடையில் வந்தே பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். மக்கள் உயிர் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. இந்த மோதல், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Read more: WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் மரணத்திற்கு என்ன காரணம் ..?