மகாராஷ்டிராவின் விரார் பகுதியில் நிகழ்ந்த துயரச்சம்பவம் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்படாத நான்கு மாடி கட்டிடத்தின் பின்புற பகுதி திடீரென அருகிலுள்ள கட்டிடம் மீது இடிந்து விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிலர் இடிபாடுகளில் சிக்கியபடியே உயிரிழந்தனர், சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் குடிமைப் பாதுகாப்பு குழுக்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றத் தொடங்கினர்.
பின்னர் கனரக இயந்திரங்கள் கொண்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. போர்க்கால அடிப்படையில் இடர்பாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்று VVMC உதவி ஆணையர் கில்சன் கோன்சால்வ்ஸ் தெரிவித்துள்ளார். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வசாய்-விரார் நகராட்சி (VVMC) அந்தக் கட்டடத்தை “சட்டவிரோதமானது” என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. சம்பவத்திற்குப் பின்னர், கட்டிட உரிமையாளர் நிதல் கோபிநாத் சானே கைது செய்யப்பட்டுள்ளார். நில உரிமையாளர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடம் முதலில் 2008–2009 காலகட்டத்தில் 54 குடியிருப்புகள் மற்றும் நான்கு கடைகளுடன் கட்டப்பட்டது. பின்னர் 2012-இல் சில பகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விராரில் நடந்த இந்த கட்டிட இடிபாடு, நகரங்களில் சட்டவிரோதக் கட்டிடங்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பின் குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
Read more: GST குறையப்போகுது! ஜாம் முதல் நட்ஸ் வரை.. எந்தெந்த உணவுப் பொருட்களின் விலை குறையும்?