தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் இந்தக் காய்ச்சல் எளிதில் குணமாவதில்லை. சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
டெங்கு பாதிப்பு குறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; மழைக்காலங்களில் வீடுகளைச் சுற்றி தேங்கியிருக்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஏடிஸ் என்ற கொசுக்களை ஒழிக்க வீடு வீடாகச் சென்று, மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து தூய்மைப்படுத்தி வருகிறோம்.
கொசு மருந்து அடித்தல், மருந்து தெளித்தல் போன்ற பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பாண்டு 15,796 டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு, 8 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் இணை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்றார்.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகளாக இருக்கலாம், எனவே கவனமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். திறந்தவெளி இடங்கள், வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் போன்றவைகளின் வாயிலாக பாதிப்புகளை தவிர்க்கலாம்.