தமிழ்நாட்டில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைக் விபத்துக்களில் 16,712 பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய நவீன வாழ்க்கைமுறையில் பைக் என்பது வசதிக்குரிய போக்குவரத்து உபகரணமாக மட்டுமல்ல, ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறியுள்ளது. ஆனால், அதே நேரத்தில், இந்த பைக்குகள் பாதுகாப்பற்ற பயணமாகவும் மாறியுள்ளன. பெரும்பாலான விபத்துகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போக்குவரத்து விதிமீறல்கள்தான். மது போதையில் வாகனத்தை ஓட்டுவது, அதிவேகமாக செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது என்று தொடங்கி போக்குவரத்து விதிமீறல்களைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.
அதிலும் சமீபகாலமாக இருசக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக விலை உயர்ந்த அதிவேக திறன்மிக்க பைக்குகளால் தினந்தோறும் விபத்துகள் நிகழ்கின்றன. பைக் ரேஸ் என்ற பெயரில் சாலையில் கண்மூடித்தனமான வேகத்தில் சென்று விபத்துகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
ஒழுங்கான வரிசையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் இடையே திடீர் திடீரென வளைந்து நெளிந்துசென்று சக வாகன ஓட்டுநர்களிடையே பீதியை ஏற்படுத்துகின்றனர். இதுபோன்ற அதிவேக பைக் ரைடர்கள் ஏற்படுத்தும் விபத்தில் அவர்கள் மட்டுமின்றி, அதேசாலையில் பயணிக்கும் மற்றவர்களின் உயிரும் பறிபோகும் சூழல் ஏற்படுகிறது.
இந்த சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பைக் விபத்துக்களில் 16,712 பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 60,502 பைக் விபத்துகள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்துகளில் 2023 ஆம் ஆண்டில் 8,113 பேரும், 2024ம் ஆண்டில் 8,059 பேரும் பலியாகி இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அரசு கவனிக்க வேண்டியவை:
* சிறிய வயதிலேயே ஹெல்மெட் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும்.
* போதையில் வாகன ஓட்டம் மற்றும் வேகக்கடந்து செல்லும் பழக்கங்களுக்கு எதிராக டிஜிட்டல் கண்காணிப்பு, சிசிடிவி, ஸ்பீட் கேமரா கட்டாயம்.
* சாலைத் தரத்தை மேம்படுத்தல். சிறிய தடங்களில் கூட இருசக்கர வாகனங்கள் சமநிலையை இழக்கின்றன.
* வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சி மற்றும் விதிமுறைகளை கடைப்பிடிக்க செய்தல். லைசென்ஸ் வழங்கும் முறை பரிசீலனை செய்யப்பட வேண்டும்.
* விபத்து நிகழும் தருணத்தில் 15 நிமிடங்களில் மருத்துவ உதவி கிடைத்தால் 40% உயிர்கள் காக்கப்படலாம்.
Read more: புதிய எடை குறைப்பு ஊசிகள்: பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்!



