திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சிறுமி கர்ப்பமாக இருந்த நிலையில் பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்துள்ளார். 7 மாதம் ஆனபோதுதான் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் நாட்டு மருந்துகளை பயன்படுத்தி சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவருடைய உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது. பெற்றோர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 24 ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. இதற்கிடையே மருத்துவ சிகிச்சைகள் பலன் அளிக்காமல் சிறுமி இன்று உயிரிழந்தார். சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த வடமதுரை போலீசார் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான நபர் யார்? நாட்டு மருந்து வழங்கியவர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தகாத உறவால் கர்ப்பமடைந்த 17 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



