இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருந்த சுங்க வரிகள் குறைக்கப்பட்டு, இறுதி விரி விகிதம் 18 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பு விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பகிர்ந்துள்ளார். இந்தியா–அமெரிக்கா உறவுகளில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத சுங்க வரி விதித்து வந்தது. இதில், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத சுங்கமும் அடங்கும். தற்போது, புதிய இடைக்கால ஒப்பந்தத்தின் கீழ், இந்த சுங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விதித்திருந்த சுங்க வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா விதிக்கும் சுங்க வரி 18 சதவீதமாக குறைக்கப்படும். அதேபோல், இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து வரும் தொழில்துறை பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் வேளாண் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட சுங்க வரிகளை நீக்கவும், குறைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இடைக்கால ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும், மருந்துகள், ரத்தினக் கற்கள், வைரங்கள், விமானப் பாகங்கள் போன்ற இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வந்த பரஸ்பர வரிகள் முழுமையாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுங்கம் அல்லாத தடைகள் தொடர்பான பிரச்சினைகளையும் இந்த ஒப்பந்தம் கையாள்கிறது. குறிப்பாக, மருத்துவ உபகரணங்கள், வேளாண் பொருட்கள் மற்றும் தகவல்–தொடர்பு தொழில்நுட்ப பொருட்கள் வர்த்தகத்தில் உள்ள தடைகள் நீக்கப்படும். அமெரிக்க மருத்துவ சாதனங்களின் வர்த்தகத்திற்கு இந்தியா உள்ள தடைகளை சரிசெய்யும் என்றும், அமெரிக்க தொழில்நுட்ப பொருட்களுக்கு சந்தை அணுகலை தாமதப்படுத்தும் அல்லது அளவுக் கட்டுப்பாடுகள் விதிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட இறக்குமதி உரிமம் நடைமுறைகள் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த ஆறு மாதங்களுக்குள், அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகள், இந்திய சந்தையில் அமெரிக்கப் பொருட்கள் நுழைவதற்கு ஏற்றதா என்பதை இந்தியா மதிப்பாய்வு செய்யவும் ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல், அமெரிக்க உணவு மற்றும் வேளாண் பொருட்கள் வர்த்தகத்தில் நீண்ட காலமாக உள்ள சுங்கம் அல்லாத தடைகளையும் இந்தியா மறுபரிசீலனை செய்யும்.
இந்த ஒப்பந்த கட்டமைப்பின்படி, மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி பொருட்கள், விமானங்கள் மற்றும் விமானப் பாகங்கள், உலோகங்கள், நிலக்கரி மற்றும் தொழில்நுட்பப் பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் டிஜிட்டல் வர்த்தகமும் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது. இரு நாடுகளும், டிஜிட்டல் வர்த்தகத்தில் உள்ள பாகுபாடு அல்லது அதிக சுமை ஏற்படுத்தும் நடைமுறைகளை சரிசெய்ய இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
மேலும், டேட்டா சென்டர்களுக்கான கிராபிக்ஸ் புராசசிங் யூனிட்கள் (GPUs) போன்ற உயர்தர தொழில்நுட்பப் பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்கவும், தொழில்நுட்பத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் இந்தியா மற்றும் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளன.
எதிர்காலத்தில், இந்தியா அல்லது அமெரிக்கா விதிக்கும் சுங்க வரிகளில் மாற்றம் ஏற்பட்டால், அதற்கேற்ற வகையில் இந்த ஒப்பந்தத்தின் உறுதிமொழிகளை மாற்றிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. மேலும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் மூலம் சந்தை அணுகலை மேலும் விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா தற்போது விதித்துள்ள சுங்க வரிகளை கருத்தில் கொண்டு, அவற்றை குறைக்க அல்லது முழுமையாக நீக்க முடியுமா என்பதையும் அமெரிக்கா பரிசீலிக்கும் என்று உறுதி அளித்துள்ளது.
Read More : OTP மோசடியில் பணத்தை இழந்தால் ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும்..! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!



