மத்தியப் பிரதேசம், கார்கோன் மாவட்டத்தில் கணவருடன் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது புதுமணப் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே செய்திகளில் காண்பிக்கும் சில விஷயங்கள் மனதை நொறுக்கும் வகையில் இருக்கின்றன. குறிப்பாக இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழக்கும் செய்தியை அடிக்கடி பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசம், கார்கோன் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் சோனம் கோவில் விழாவில் தனது கணவர் கிருஷ்ணபாலுடன் ‘ஓ மேரே தோல்னா’ பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தார். மேடையில் சிரிப்புடன் மகிழ்ச்சியாக ஆடிக்கொண்டிருந்த அவர், திடீரென்று தடுமாறத் தொடங்கினார். பின்பு அப்படியே தரையை நோக்கி சரிந்து விட்டார். அதன் பிறகு அவர் உடலில் அசைவே இல்லை.
ஆரம்பத்தில் அது நடனத்தின் ஒரு பகுதி என குடும்பத்தினர் நினைத்தனர். பின்னர் நீண்ட நேரம் அசைவு இல்லாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read more: ChatGPT-யில் நேரடி ஷாப்பிங்.. OpenAI அறிமுகப்படுத்திய புதிய அம்சம்..! இது எப்படி செயல்படுகிறது..?



