தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று மதுரை, பாரபத்தியில் நடைபெறுகிறது.. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் தொண்டர்களுக்காக சுமார் 2 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.. மதுரை மக்கள் விஜய்யின் இந்த சந்திப்பை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவிய தொடங்கி உள்ளனர். மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளதால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரையை பொறுத்தவரை நேற்றைய தினமே 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவான நிலையில், இன்று காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.
நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொண்டர்களுக்கு ஜூஸ் வழங்குவது, ட்ரோன் மூலம் தண்ணீர் தெளிப்பது என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் வெயில் தாக்கத்தால் தொண்டர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மதுரை 2 மணி நேர நிலவரப்படி 2 லட்சம் பேர் மாநாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் காலையிலேயே மாநாட்டுக்கு வந்திருந்த பல தொண்டர்களும் தங்களது கைக்குழந்தைகளுடன் வந்திருந்ததைக் காண முடிந்தது. இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து, முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர். மாநாட்டுத் திடலுக்கு அருகே அவசர மருத்துவ வாகன சேவைக்கான சைரன் விடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Read more: அரிய குரு புஷ்ய யோகம் : இந்த ராசிக்காரர்களுக்கு அமோக பலன்கள்! அதிர்ஷ்டம் பெருகும்!