இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.
பூமியின் விட்டம் 12,742 கி.மீ. அதன் சுற்றளவு 40,075 கி.மீ. நிறை 5.9722 x 10^24 கிலோகிராம். இந்த அளவு பெரிய பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் எந்த அளவு வேகமாக அது சுழலும். நினைத்தாலே தலை சுற்றுகிறதா?
ஆம், பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். வண்டியில் 80 கி.மீ வேகத்தில் சென்றாலே பறப்பது போல் உணரும் நாம் எப்படி இந்த வேகத்தை உணர முடியவில்லை என்று சிந்தித்துள்ளீரா?
ஆனால் தற்போது பூமியின் சுழற்சியில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இயல்பை விட பூமி வேகமாக சுழலுவதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.இதன் விளைவாக நாட்கள் சில மில்லி விநாடிகள் குறைகின்றன. இந்த இழப்புகள் சிறியதாகத் தோன்றினாலும், நம் நேர கட்டுப்பாட்டில் சில பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்..
ஜூலை 9, 22 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய தேதிகளில் என்ன நடக்கும்? பூமியின் சுழற்சி வேகமாக இருக்கும் 3 குறிப்பிட்ட தேதிகளையும் விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்: ஜூலை 9, 2025; ஜூலை 22, 2025; ஆகஸ்ட் 5, 2025. இந்த நாட்களில் ஒரு நாள் 24 மணிநேரத்தை விட 1.51 மில்லி விநாடிகள் குறைவாக இருக்கலாம். மனிதர்களால் இந்த மாற்றத்தை உணர முடியாமல் போகலாம், ஆனால் அறிவியல் அடிப்படையில், இது மிகவும் முக்கியமானது.. காரணம் சந்திரன் பூமியின் பூமத்திய ரேகையிலிருந்து மிக தொலைவில் இருக்கும், அப்போது சந்திரன் துருவங்களுக்கு அருகில் வரும். அதனால் பூமியின் சுழற்சி வேகமடைந்து, நமது நாள் வழக்கத்தை விடக் குறைவாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு சந்திரனின் நிலை மற்றும் ஈர்ப்பு சக்தியே முக்கிய காரணமாக உள்ளதாகக் கூறுகின்றனர். அத்துடன் பருவங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள்தான் பூமியின் சுழலும் வேகத்தை மாற்றுகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால், இன்று ஒரு நாள் ( ஜீலை 9) சராசரியாக 1.3 முதல் 1.6 மில்லி விநாடிகள் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போது 6-ஆவது முறை என்று பூமி சுழற்சி மற்றும் குறிப்பு முறைமை மையம் குறிபிடுகிறது.
பூமியின் சுழற்சி வேகம் மாறுபடுவதால், ஒரு நாளின் நீளம் குறைகிறது அல்லது அதிகரிக்கிறது. தற்போது பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்ததால், ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தை விடக் குறைவாக இருக்கும். இது பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற காரணிகளால் ஏற்படுகிறது. பூமியின் குறைந்து வரும் சுழற்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்ள அணு கடிகாரங்களில் லீப் வினாடிகள் (Leap Second ) சேர்க்கப்படுகின்றன. பூமியின் இந்த வேகமான சுழற்சி நேரத்தின் பாதையில் தொடர்ந்து சுற்றி வருவதால் 2029 ஆம் ஆண்டளவில், முதல் முறையாக ஒரு லீப் வினாடியை நீக்க வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
லீப் வினாடிகள் என்பது, சாதாரண நிமிடமான 60 வினாடிகளுடன் ஒரு வினாடி கூடுதலோ குறைவோ சேர்க்கப்படும் ஒரு சிறு நேர திருத்தம் ஆகும். இதன் மூலம், பூமியின் உண்மையான சுழற்சி நேரம் மற்றும் ஆட்டொமேட்டிக் கிளாக் எனப்படும் அணுகடிகாரத்தின் நேரம் ஒத்திசைக்கப்படும். மொத்தமாக, பூமியின் சுழற்சி வேகம் இயற்கையான முறையில் மாறிக்கொண்டேதான் இருக்கும். இந்த மாற்றம் விஞ்ஞானிகளுக்கு சற்று சவாலாக இருக்கும்.
பூமியின் சுழற்சி விளக்கம்: பூமியில் ஒரு நாள் என்பது கோள் அதன் அச்சில் ஒரு முழு சுழற்சியை முடிக்க எடுக்கும் நேரம் என வரையறுக்கப்படுகிறது – தோராயமாக 86,400 வினாடிகள் அல்லது 24 மணிநேரம். இருப்பினும், இந்த சுழற்சி நிலையானது அல்ல, மேலும் சூரியன் மற்றும் சந்திரனின் நிலைகள், பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கோளின் நிறை பரவல் போன்ற பல்வேறு காரணிகளால் இது பாதிக்கப்படலாம்.
வரலாற்று ரீதியாக, பூமியின் சுழற்சி படிப்படியாகக் குறைந்து வருகிறது, இதனால் நாட்களின் நீளம் காலப்போக்கில் அதிகரித்து வருகிறது. 1 முதல் 2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் என்பது சுமார் 19 மணிநேரம் மட்டுமே நீடித்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்ததாலும், அதிக ஈர்ப்பு விசையை செலுத்துவதாலும், கோள் வேகமாகச் சுழலுவதாலும் இது நிகழ்ந்திருக்கலாம்.
சந்திரன் மெதுவாக விலகிச் செல்லும்போது, பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ளது, இதன் விளைவாக சராசரியாக நீண்ட நாட்கள் நீடிக்கின்றன. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், உதாரணமாக, 2020 ஆம் ஆண்டில், 1970களில் துல்லியமான அளவீடுகள் தொடங்கியதிலிருந்து பூமி எந்தப் புள்ளியையும் விட வேகமாகச் சுழன்று கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். timeanddate.com இன் படி, ஜூலை 5, 2024 அன்று பூமி தனது சுழற்சியை வழக்கமான 24 மணிநேரத்தை விட 1.66 மில்லி விநாடிகள் வேகமாக முடித்தபோதுதான் அதிகபட்ச வேகமான சுழற்சி பதிவு செய்யப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது.