தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் சென்று, எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார். சுமார் 300 பயணிகளுடன் மாலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற ஒரு மாலை நேர ரயிலின் பின்பக்கப் பெட்டிகள், உள்ளூர் நேரம் இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு, மாட்ரிட்டிலிருந்து தெற்கு ஸ்பெயின் நகரமான ஹுயெல்வாவுக்குச் சென்றுகொண்டிருந்த சுமார் 200 பயணிகளைக் கொண்ட மற்றொரு ரயிலுடன் மோதியது.
ஸ்பெயினின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆஸ்கார் புயன்டே, நள்ளிரவுக்குப் பிறகு, தெற்கு ஸ்பெயினில் நடந்த இந்த ரயில் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், மீட்புக் குழுக்கள் தப்பிப்பிழைத்த அனைவரையும் வெளியேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அதிகாரிகள் உயிரிழப்புகளைத் தொடர்ந்து சரிபார்த்து வருவதால், இறுதி பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று புயன்டே கூறினார். மே மாதம் தான் புதுப்பிக்கப்பட்ட ஒரு சமதளப் பாதையில் இந்தச் சம்பவம் நடந்ததால், இது “உண்மையிலேயே ஒரு விசித்திரமான” நிகழ்வு என்று அவர் விவரித்தார். தடம் புரண்டு எதிர் தண்டவாளத்திற்குச் சென்ற ரயில் நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான பழமையானது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
தடம் புரண்ட ரயில் தனியார் ரயில் நிறுவனமான ஐரியோவால் (Iryo) இயக்கப்பட்டது, அதே சமயம் மோதலின் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட எதிரே வந்த ரயில், ஸ்பெயினின் அரசுக்கு சொந்தமான ரென்ஃபே (Renfe) ரயில்வே நிறுவனத்தைச் சேர்ந்தது.
ஐரியோ நிறுவனம் “நடந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும்”, நிலைமையை நிர்வகிக்கவும் விசாரணைக்கு ஆதரவளிக்கவும் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் உறுதிப்படுத்தியது.
விபத்து எப்படி நடந்தது?
முதல் ரயிலின் பின்பகுதி தடம் புரண்டு, மற்றொரு ரயிலின் முன்பகுதியுடன் மோதியது. இதனால் அதன் முதல் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி, நான்கு மீட்டர் (13 அடி) சரிவில் கவிழ்ந்தன. ரென்ஃபே ரயிலின் அந்த முன்பகுதிதான் மிக மோசமாக சேதமடைந்தது என்றும் அவர் கூறினார்.
கோர்டோபாவின் தீயணைப்புத் துறைத் தலைவர் பிரான்சிஸ்கோ கார்மோனா, ஸ்பானிய தேசிய வானொலியான RNE-யிடம், ரயில்களில் ஒன்று கடுமையாகச் சிதைந்துள்ளதாகவும், குறைந்தது நான்கு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகியிருந்ததாகவும் தெரிவித்தார்.
அண்டலூசியாவின் பிராந்திய சுகாதாரத் தலைவர் அன்டோனியோ சான்ஸ், காயமடைந்த 73 பயணிகள் ஆறு வெவ்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விபத்து நடந்த இடத்தின் நிலைமை “மிகவும் தீவிரமாக உள்ளது” என்று சான்ஸ் கூறினார். “நமக்கு முன்னால் ஒரு மிகக் கடினமான இரவு இருக்கிறது.”
பயணிகள் அவசரகால சுத்தியல்களை பயன்படுத்தி ஜன்னல்களை உடைத்ததாகவும், சிலர் பெரிய காயங்கள் இன்றி நடந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்தவர்களால் எடுக்கப்பட்ட காணொளிகளில், பெட்டிகள் ஒரு கோணத்தில் சாய்ந்திருக்க, சிலர் அந்த இடிபாடுகளில் இருந்து தப்பிப்பதற்காக ஜன்னல்கள் வழியாக வெளியே ஊர்ந்து செல்வது தெரிகிறது.



