தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ஏற்கனவே போனஸ் அறிவித்த நிலையில், அகவிலைப்படி உயர்வும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், நுகர்பொருள் வாரிய கழகம், வளத்துறை உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.
இந்த ஆண்டு மொத்தம் 2.95 லட்சம் ஊழியர்கள் இதனால் பயனடைவார்கள். நிரந்தர பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 மற்றும் அதிகபட்சம் ரூ.16,800 வரை போனஸாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.376 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உபரித்தொகை இல்லாத நிறுவனங்களுக்கு 8.66 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும்.
இதனுடன், தீபாவளிக்கு முன்பாகவே அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அமைச்சரவை 3 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசும் இதே அளவில் உயர்வை வழங்கும் வாய்ப்பு உள்ளது.
தற்போது அரசு ஊழியர்களுக்கு 55 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது 58 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த உயர்வால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 உள்ள ஊழியருக்கு மாதம் ரூ.540 கூடுதலாக கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓய்வூதியம் பெறும் ஒருவரின் அடிப்படை ஓய்வூதியம் ரூ.9,000 எனில், அகவிலைப்படி உயர்வுடன் மாதம் ரூ.270 கூடுதல் தொகை கிடைக்கும். அகவிலைப்படி உயர்வு பணவீக்கத்தின் தாக்கத்தை சமன்படுத்தும் வகையில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இருமுறை வழங்கப்படுகிறது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு முன் ஊழியர்களுக்கு கூடுதல் நிதி நிவாரணம் கிடைக்கும் நிலையில், அரசுத் துறைகளில் மகிழ்ச்சி நிலவுகிறது.



