தமிழ்நாட்டில் வரலாற்று சிறப்பும் ஆன்மிக முக்கியத்துவமும் வாய்ந்த தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்றாக, தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சுருளி வேலப்பர் கோவில் பக்தர்களை ஈர்க்கும் அற்புத தலமாக விளங்குகிறது. சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், சித்தர்கள் வாழ்ந்த தெய்வீக நிலமாக கருதப்படுகிறது.
சுருளிமலை பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ளது. பழனி முருகனின் நவபாஷாண சிலையை உருவாக்க பயன்படுத்திய இறுதி மூலிகையை போகர் சித்தர் இந்த மலையிலிருந்தே எடுத்ததாக பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைகளில் சுமார் 225 குகைகள் இருப்பதாகவும், இன்றும் பல சித்தர்கள் இங்கு தவம் செய்து வருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, விபூதி குகையில் ஈரமான மண் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள நீரில் விழும் இலைகள் பாறை போல மாறும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.
சுருளியாண்டவர் சன்னதியின் கிழக்கு பகுதியில் உள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் புகழ்பெற்றது. ஒருவர் படுத்துக்கொண்டு செல்லும் அளவிற்கு குறுகலான இந்தக் குகையில், சிவபெருமான் நுழைந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் இது “கைலாசக் குகை” என்றும் அழைக்கப்படுகிறது.
புராணக் கதைகளின்படி, ராவணன் ஏற்படுத்திய கொடுமையால் துன்புறந்த தேவர்கள், முனிவர்கள் விஷ்ணு தலைமையில் இங்கு ஆலோசனை நடத்தியதாகவும், அதை அறிந்த ராவணன் தாக்க முயன்றபோது விஷ்ணு பஞ்சபூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சிவபெருமானின் திருமண நிகழ்வின்போது, அகத்தியர் க்கு தனது திருமணக் கோலத்தை இந்தக் குகையிலேயே அருளியதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கைலாயநாதர் குகைக்கு மேலாகவே சுருளி வேலப்பர் கோவில் அமைந்துள்ளது என்பது இந்தத் தலத்தின் இன்னொரு தனிச்சிறப்பு.
Read more: 2026 தேர்தலில் தவெக வெற்றி பெறுமா..? விஜய் முதல்வர் ஆவாரா? பிரபல ஜோதிடரின் கணிப்பு..!



