தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) நீண்டகாலமாக காலியாக இருந்த 400 உதவி பொறியாளர் (Assistant Engineer) மற்றும் 1,850 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி (TNPSC) மூலம் நிரப்ப மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு, மின்சாரத் துறையில் வேலை எதிர்பார்த்து காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் (TANGEDCO) மற்றும் மின்சார வாரியத்தில் மொத்தம் 1.5 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், மதிப்பீட்டாளர், ஜூனியர் கணக்கு உதவியாளர், உதவி பொறியாளர், கள உதவியாளர், கேங்மேன்,
வயர்மேன் உள்ளிட்ட பதவிகள் அடங்கும். இப்பணியிடங்கள் முன்பு வாரியம் நேரடியாகவே நிரப்பி வந்த நிலையில், 2023 முதல் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படுவதாக அரசு தீர்மானித்தது.
2021-ல் 9,000-க்கும் மேற்பட்ட கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 2023-ல் 10,260 காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. தற்போது, 400 AE பணியிடங்களும் 1,850 Field Assistant பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 2,250 பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையின்படி: மொத்தம் 7 தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் 6 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. மீதமுள்ள Group 5A அறிவிப்பு வரும் அக்டோபர் 7 அன்று வெளியாகும்.
மின்சாரத் துறை மற்றும் போக்குவரத்து துறையில் உள்ள ஆயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் ஒரே கட்டமாக டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படுவதால் தேர்வர்கள் பெரும் நம்பிக்கை அடைந்துள்ளனர். அதேசமயம், இன்னும் காலியாக உள்ள பதவிகளும் விரைந்து நிரப்பப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். தேர்வு பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் குறித்து விரிவான தகவல்களை டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in -ல் தெரிந்துகொள்ளலாம்.