பிலிப்பைன்ஸ் நாட்டை “கொமெ” (Kommé) எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் கடுமையாகத் தாக்கியுள்ளது. இது அந்நாட்டில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பங்கசினான் மாகாணத்தில் உள்ள அக்னோ (Agno) நகரம், புயலால் மிகுந்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
புயல் மையம் நகரத்தை கடந்தபோது, மணிக்கு 120 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அதனுடன் பெய்த கனமழை, நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களை ஏற்படுத்தியது.
சேதம் மற்றும் பாதிப்புகள்: கொமே புயலால் தற்போது வரை 25 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புயலால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மலை மேடான பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. புயலின் முன்னெச்சரிக்கையாக 2 லட்சத்து 78 ஆயிரம் மக்கள் அவர்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்துள்ளனர்.
அரசு நடவடிக்கைகள்: தேசிய பேரிடர் மேலாண்மை மையம், நிவாரணப் பொருட்கள், உணவு, குடிநீர், மருத்துவ உதவிகளை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்புப் படைகள் மற்றும் மீட்பு குழுக்கள் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொது சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இடம்பெயர்த்த மக்களுக்கு தற்காலிக முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் பல இடங்களில் உணவுப் பற்றாக்குறை, சுகாதார வசதி பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த சூழ்நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1-2 நாட்கள் மழை தொடரும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்..