ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை தரக் கூடியது புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடாகும்.
புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்றாலும், புரட்டசசி சனிக்கிழமைகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாகும்.
தமிழ் மாதத்தில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார கௌரி விரதம் மற்றும் அம்பிகைக்கு உரிய நவராத்திரி பண்டிகை, முன்னோர்களுக்கான வழிபாடு போன்றவை கொண்டாடப்படுகிறது .புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் எனவும் கூறப்படுகிறது. சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்றும் நம்பப்படுகிறது.
பெருமாளை குலதெய்வமாகவும் ,இஷ்ட தெய்வமாகவும் வழிபடுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை இடுவார்கள் .தளிகை என்றால் படையல் என்பதாகும்.தளிகையில் பெருமாளுக்கு ஐந்து விதமான சாதங்கள் படைக்கப்படுகின்றது. தேங்காய் சாதம், தயிர் சாதம்,சர்க்கரை பொங்கல் ,புளியோதரை போன்ற சாதங்களும், உளுந்துவடை ,சுண்டல் மற்றும் பானகம், துளசி தீர்த்தம் போன்றவை தளிகையில் வைக்கப்படுகின்றது. ஐந்து விதமான சாதங்களை பச்சரிசியில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழை இலையில் ஐந்து விதமான சாதத்தால் திருமாலின் திரு உருவ படத்தை வரைந்து தீப தூப ஆராதனை இட்டு கோவிந்தா என கோஷமிட்டு வழிபடுவதாகும். தளிகை போட முடியாதவர்கள் மாவிளக்கு வைத்து வழிபாடுகளை செய்யலாம். பெருமாளுக்கு தயிர் சாதம் மிகவும் பிடித்த உணவாக கூறப்படுகிறது. அதனால் தான் இன்றளவும் திருமலையில் ஏழுமலையானுக்கு மண்பானையில் தயிர் சாதம் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 27ஆம் தேதி இன்று இரண்டாவது சனிக்கிழமை. இது ஏகாதசியுடன் சேர்ந்து வருவது மிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்த நாளில் துளசி பூஜை செய்வது மிகச் சிறப்பாகும். இந்த நாளில் முறையாக விரதம் இருந்து, விஷ்ணுவை வழிபட்டால், புண்ணியமும், செல்வ வளமும், மன அமைதியும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இரண்டாம் சனி, இரட்டிப்புப் பலன்களைத் தரும். இந்த நாளில் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
புரட்டாசி 2ம் சனிக்கிழமை அன்று, நீங்கள் செய்யும் வழிபாடு, இரட்டிப்பு பலன்கள் கொடுக்கும் என்பது ஐதீகம். கக்கும் கடவுளான மகாவிஷ்ணு, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் தருவார், அதே நேரத்தில், நவராத்திரி ஐந்தாம் நாளில், மகாலட்சுமி வழிபாடு செய்யப்படுவதால், இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று, பெருமாளுக்கு படையல் போட விரும்பினால் அதை செய்யலாம். அல்லது வீட்டில் குத்துவிளக்கேற்றி, பெருமாள் மற்றும் மகாலட்சுமி தாயார் படங்களுக்கு பூக்கள் வைத்து பூஜை செய்யலாம். பூஜை முடியும் வரை விரதம் இருப்பது நல்லது. அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று, பெருமாளையும் தாயாரையும் தரிசிக்கலாம். வீட்டில் மட்டுமல்ல, கோவிலில் இருந்தும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றலாம். தாயாருக்கு தாமரை பூ அல்லது ரோஜா மலர் வைத்து பூஜை செய்யலாம். பெருமாளுக்கு மாவிளக்கு போடுவது மிகுந்த புனிதமானது. இது குடும்பத்திற்கு சீரும் சிறப்பும் தரும்; கண்களுக்கு தெரியாத தொல்லைகள், தோஷம் நீங்கும்.
Readmore: தீபாவளிக்கு ரேஷனில் இலவசமாக மளிகை பொருள், சர்க்கரை, எண்ணெய் வழங்கப்படும்…!



