மேற்கு கொல்கத்தாவின் தாரதாலா பகுதியில் புதன்கிழமை மதியம் கட்டுமானத்தில் இருந்த 3 மாடி கிடங்கு ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர், சிக்கியிருந்த 21 பேர் மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகளை ஆய்வு செய்த மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, சுமார் 12 முதல் 18 பேர் உள்ளே சிக்கியிருப்பதாகவும், அவர்கள் இந்திய ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதல்வர் சுவேந்து அதிகாரி இதுகுறித்து பேசிய போது “NDRF, ராணுவம், SDRF, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஆகியவை இணைந்து இங்கு பணியாற்றி வருகின்றன. 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். SSKM மருத்துவமனை சிகிச்சையளித்து வருகிறது. சுமார் 12 முதல் 18 பேர் உள்ளே சிக்கியுள்ளனர்; அவர்கள் இந்திய ராணுவத்துடன் தொடர்பில் உள்ளனர்,” என்று கூறினார்.
நகரில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திற்குச் சொந்தமான குத்தகை நிலத்தில் இந்தக் கிடங்கு கட்டப்பட்டு வந்தது. காயமடைந்தவர்களில் 10 பேர் அரசுக்குச் சொந்தமான SSKM மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் (Trauma Care Centre) அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“தாரதாலா பகுதியில் உள்ள பிரேஸ் பிரிட்ஜ் (Brace Bridge) அருகே டிரான்ஸ்போர்ட் டிப்போ சாலையில் அமைந்துள்ள கிடங்கின் கூரை மதிய வேளையில் இடிந்து விழுந்தது. எங்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். சம்பவத்தின் போது சிலர் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.” “இன்னும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்,” என்று அதிகாரி கூறினார்.
கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது இரும்புத் தூண்கள் மற்றும் கான்கிரீட் ஆகியவற்றின் பெரும் பகுதிகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் உதவி கேட்டு அலறும் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
“முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கான ஆர்.சி.சி (RCC) கட்டமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தரைத்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது திடீரென முழு கட்டமைப்பும் சரிந்து விழுந்தது,” என்று நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது, கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடி கிடங்கின் (warehouse) கூரை, கான்கிரீட் வார்க்கும் பணியின்போது சரிந்து விழுந்தது. இந்தக் கிடங்கின் கட்டுமானத்தில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா காவல்துறை, பேரிடர் மேலாண்மைக் குழு, சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் அவசர சேவைக் குழுவினர் ஆகியோர் அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ராணுவ அதிகாரிகளும் மீட்புப் பணிகளுக்கு உதவினர். அதேவேளையில், சரிந்து விழுந்த இரும்புத் தூண்களை அகற்ற கிரேன் மற்றும் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இரும்பு மற்றும் கான்கிரீட்டை வெட்ட ‘கேஸ் கட்டர்கள்’ (gas cutters) பயன்படுத்தப்பட்டன; மேலும், செங்குத்தாகத் துளையிடும் முறை மூலம் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிய என்.டி.ஆர்.எஃப் (NDRF) குழுவினர் மோப்ப நாய்கள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தினர்.
“இடிபாடுகளுக்கு அடியில் இருந்து வரும் உதவிக்கான குரல்களைப் பின்தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேவேளையில், சிக்கியிருப்பவர்களுக்கு அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறோம்,” என்று கொல்கத்தா காவல்துறை பேரிடர் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
கட்டுப்பாட்டு அறை எண்கள்:
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாநிலச் செயலகத்தில் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கட்டுப்பாட்டு அறை எண்கள் (1070, 8697981070, 033-22143526/22535185) செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.
சம்பவ இடத்திற்கு வந்திருந்த கொல்கத்தா மாநகராட்சி அதிகாரிகள், இந்தக் கட்டடச் சரிவுக்கு வடிவமைப்பு மற்றும் கட்டுமானக் குறைபாடுகளே முதற்கட்டக் காரணமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் அக்னிமித்ரா பால் மற்றும் கொல்கத்தா மாநகராட்சி ஆணையர் ஸ்மிதா பாண்டே ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொல்கத்தா காவல் ஆணையர் அஜய் நந்த் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார்.



