மத்திய அரசு இன்று ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்திய 4 தொழிலாளர் சட்டங்கள் (Labour Codes) உடனடி அமலுக்கு வருவதாக அறிவித்தது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது..
4 தொழிலாளர் குறியீடுகள் என்னென்ன :
ஊதியக் குறியீடு, 2019 (Code on Wages, 2019)
தொழில்துறை உறவுகள் குறியீடு, 2020 (Industrial Relations Code, 2020)
சமூக பாதுகாப்பு குறியீடு, 2020 (Code on Social Security, 2020)
தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிப்புற நிலை குறியீடு, 2020 (Occupational Safety, Health and Working Conditions Code, 2020)
“4 தொழிலாளர் குறியீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இப்போது அவை நாட்டின் சட்டமாகும்,” என்று தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ” தொழிலாளர் விதிகளை நவீனப்படுத்துதல், தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துதல், மேலும் வேலை உலகில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கேற்ப தொழிலாளர் சூழலையும் ஒத்திசைக்கப்பட்ட முறையில் அமைத்தல் ஆகியவற்றின் மூலம், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கை எதிர்காலத்துக்குத் தயாரான பணியாளர்கள் படையை உருவாக்கும் அடித்தளத்தையும், வலுவான மற்றும் தாங்கும் திறனுடைய தொழில்துறைகளையும் உருவாக்குகிறது. ” என்று தெரிவித்துள்ளது..
மேலும் “ இந்தியாவின் பல தொழிலாளர் சட்டங்கள் இன்று இருந்து பல தசாப்தங்களுக்கு முன், அதாவது சுதந்திரத்திற்கு முன் மற்றும் சுதந்திரத்தின் ஆரம்ப ஆண்டுகளில் (1930கள் முதல் 1950கள் வரை) — உருவாக்கப்பட்டவை. அப்போது நாட்டின் பொருளாதார நிலையும், வேலைகள் நடைபெறும் உலகமும் இன்றையதை விட முற்றிலும் வேறுபட்டதாக இருந்தன.
கடந்த சில தசாப்தங்களில் முக்கிய உலக நாடுகள் தங்களின் தொழிலாளர் சட்டங்களை புதுப்பித்து, எளிமைப்படுத்தி ஒருங்கிணைத்திருக்கின்றன. ஆனால் இந்தியா மட்டும் 29 மத்திய தொழிலாளர் சட்டங்களாகப் பிளவுபட்டு, சிக்கலாகவும் பல பகுதிகளில் காலாவதியாகவும் உள்ள விதிகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது, என அதில் கூறப்பட்டுள்ளது.
Read More : இனி உணவகங்கள், அலுவலகங்கள், கூட்டங்களில் ஆதார் முக ஸ்கேன் நுழைவு தேவை.. UIDAI முக்கிய முடிவு!



