பள்ளிக்கு சென்ற 4 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது 4 வயது மகனை, வழக்கம்போல ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் தந்தை அவசரமாக பிரேக் அடித்துள்ளார். இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் தலைகீழாய் கவிழ்ந்தது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் மற்றும் அவரது தந்தையை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. தந்தை கண் முன்னே 4 வயது மகன் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோவின் நிலையையும், அதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளையும் உறுதி செய்யும் நோக்கில் வாகனம் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..! ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு..