உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு எச்ஐவி வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒரு பெண் கைதிக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் கூறுகையில், சிறையில் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட கைதிகளின் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதிகளின் சிகிச்சை நிலவரம் குறித்து பேசிய மருத்துவர், ‘எச்ஐவி நோயாளிகளுக்காக சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கு தொடர்ந்து பரிசோதனை நடைபெற்று வருகிறது’ என்றார்.
மேலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இலவச சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். தற்போது ஹல்த்வானியில் உள்ள சிறையில் 1,629 ஆண் மற்றும் 70 பெண் கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.