இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு பணியினை ஐ.பி.பி.எஸ் (IBPS) அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு கனரா வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்கிறது. இதில் தற்போது ப்ரோபேசனரி ஆபிஸர் அல்லது அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 5208 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க முதலில் 21.07.2025 கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ஒரு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://ibps.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.850. எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றத்திறனாளி பிரிவுகளுக்கு ரூ.175 கட்டணம் செலுத்த வேண்டும்.