ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் கிஷ்த்வார் மாவட்டம் சிசோடி கிராமத்தில் கடந்த 14-ந்தேதி திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு அப்பகுதியை நிலைகுலைய வைத்துள்ளது. திடீர் கனமழையால் அங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளம் அந்த கிராமத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அங்கு கோவிலுக்கு செல்லக் கூடியிருந்த பக்தர்கள் பலர் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
மலைப்பாதையில் ஏற்பட்ட இந்த வெள்ளப் பெருக்கால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் சிக்கிக் கொண்டதால், மீட்பு நடவடிக்கைகள் கடும் சிரமத்துடன் மேற்கொள்ளப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், மற்றும் சிறிய கட்டிடங்கள் பலவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பேரழிவில் இதுவரை 2 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மீட்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கி மாயமான மேலும் 3 பேரின் உடல்களை மீட்டனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.
அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதுடன், காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF), மாநில மீட்பு குழுவினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் இந்த மேக வெடிப்பு பேரழிவு, பக்தர்களையும், உள்ளூர் மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Read more: “ரெடியா மாமே”..!! தவெக மாநாட்டில் மாஸ் என்ட்ரி கொடுக்கப் போகும் அஜித்..? பேனர் அடித்த ரசிகர்கள்..!!landslides