பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 17.07.2025 வரை, தமிழ்நாட்டில் 9,57,825 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 7,43,299 வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6,44,600 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக அரசால் மொத்தம் 59,121 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மத்திய பங்காக, ரூ.2158.14 கோடி மாநிலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் “அனைவருக்கும் வீடு” வழங்குவதற்காக, ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏப்ரல் 1, 2016 முதல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மார்ச் 2029 க்குள் 4.95 கோடி தகுதியுள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் வீடுகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பலன்களைப் பெற தகுதியுள்ள கூடுதல் குடும்பங்களை அடையாளம் காண தமிழ்நாடு அரசு ஆவாஸ் பிளஸ் 2024 கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு காலத்தில், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம் பாதிக்கப்பட்டது. இது தவிர, மாநில கருவூலத்திலிருந்து திட்டத்தின் மாநில முதன்மை கணக்கிற்கு மத்திய மற்றும் மாநில பங்கை வெளியிடுவதில் தாமதம், பயனாளிகளின் விருப்பமின்மை, நிரந்தர இடம்பெயர்வு, இறந்த பயனாளிகளின் வாரிசுரிமையில் ஏற்பட்ட சர்ச்சை, மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களால் நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் ஒதுக்குவதில் நேரிட்ட தாமதம் போன்ற சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ் இலக்குகளை அடைவதற்கான வேகத்தை அதிகரிக்க அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Read more: புனித பயணம் செல்ல நபர்களுக்கு… தமிழக அரசு வழங்கும் ரூ.10,000 நிதி உதவி…! முழு விவரம்