ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டம் நேற்று இரவில் ஏற்பட்ட இரண்டு தனித்தனி இயற்கை பேரிடர்களால் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. ஜோத் காட்டி பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஜாங்லோட் பகுதியில் நிலச்சரிவில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தம் 7 பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பேரிடரால் ஒரு ரயில் பாதை, தேசிய நெடுஞ்சாலை-44, ஒரு காவல் நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்படுத்தியுள்ளார். சிவில் நிர்வாகம், ராணுவம், துணை ராணுவம் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தலைவர்களின் இரங்கல்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, “ஜோத் காட் மற்றும் ஜூதானா உட்பட கதுவா பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள், சேதங்கள் நிகழ்ந்திருப்பது துயரமானது” எனக் கூறி, உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வானிலை எச்சரிக்கை: கதுவா மாவட்ட நிர்வாகம் மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாவது: அடுத்த சில நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் அபாயம் உள்ளது. ஆறுகள், ஓடைகள், நஹல்லாக்கள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். மலைப்பாங்கான பகுதிகள், நிலச்சரிவு ஏற்படும் இடங்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தொடர்புக்கு 01922-238796 , 01922-238796 என்ர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், பெரும்பாலான ஆறுகள், நீர்நிலைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாகவும், உஜ் நதி அபாயக் குறியை நெருங்கி வருகிறது என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த வாரத்தின் ஆரம்பத்தில், ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 14 அன்று மச்சைல் மாதா யாத்திரை நடைபெறும் சிசோட்டி பகுதியில் இந்த சோகம் ஏற்பட்டது. இன்னும் 82 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். 9,500 அடி உயரத்தில் உள்ள மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் 8.5 கி.மீ யாத்திரை பாதை தற்போது அபாயகரமான நிலையில் உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து நிகழும் மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளங்கள், அப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் யாத்திரை பயணிகளின் உயிரையும் பெரும் அபாயத்தில் ஆழ்த்தி வருகின்றன.
Read more: ரயில் பயணச்சீட்டு முகவராக செம வாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!! முழு விவரம் இதோ..