டெல்லியின் ஜெய்த்பூரில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியின் ஜெய்த்பூரின் ஹரி நகர் பகுதியில் இன்று காலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது.. இந்த கனமழையால், அங்குள்ள 100 அடி நீளமுள்ள சுவர் இடிந்து விழுந்ததில் பலர் இதில் சிக்கிக் கொண்டனர்.. இதையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த மீட்புப்படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. எனினும் இந்த சுவர் இடித்து விழுந்ததில் படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்..
இந்த சம்பவம் குறித்து பேசிய டெல்லி போலீசார் “ஜெய்த்பூரின் ஹரிநகரில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 2 சிறுமிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.
கூடுதல் டிசிபி (தென்கிழக்கு) ஐஸ்வர்யா சர்மா பேசிய போது “ மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தது. மீட்புக் குழுவினர் சிக்கிய குடியிருப்பாளர்களை மீட்டுள்ளனர்.. இழப்புகளை தடுக்க மீதமுள்ள மக்களை வெளியேற்றினர்.” என்று தெரிவித்தார்..
டெல்லியின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.. இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும் என்றும் எச்சரித்திருந்தது.. டெல்லியில் நேற்றிரவு முதலே பலத்த மழை பெய்து வந்தது.. இதனால் வசந்த் குஞ்ச், ஆர்.கே. புரம், கன்னாட் பிளேஸ் மற்றும் மின்டோ பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது.. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.. டெல்லியில் ஆகஸ்ட் 12 வரை தலைநகரில் மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் இமாச்சலப் பிரதேசத்தின் 3 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கையையும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
ஜூன் 20 முதல், இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தொடர்பான 202 இறப்புகள் பதிவாகியுள்ளன.. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 108 பேர் மற்றும் சாலை விபத்துகளால் 94 பேர் உயிரிழந்தனர்.. இந்த மாதம் மழை இயல்பை விட 35 சதவீதம் அதிகமாகும், சோலன், குலு மற்றும் கின்னௌர் போன்ற மாவட்டங்கள் வழக்கமான சராசரியை விட இரு மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : ஒரு முறை முதலீடு செய்தால்.. மாதம் ரூ.6,000 லாபம்! இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் பற்றி தெரியுமா..?