2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார் ஆனால் பாஜக தலைவர்கள் பலரும், இந்த கூட்டணி ஆட்சி சில மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.. இந்நிலையில் இந்த கூட்டணிக்கு எதிராக ஆளுங்கட்சி 40 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கியதால் ஆட்சி கவிழ்ந்தது.. உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஏக்நாத் ஷிண்டே புதிய முதலமைச்சராகவும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.. மகாராஷ்டிரா சட்டசபையில் புதிதாக அமைந்த சிவசேனா-பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது…
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே-பாஜக கூட்டணி அடுத்த 6 மாதங்களில் கவிழும் என்றும், இடைக்காலத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.. மும்பையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் அடுத்த ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும்.. எனவே இடைக்கால தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என்று சரத் பவார் கூறியதாக அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்தார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவுடனான மோதல் ஏற்பட்ட பின்னர் கட்சிக்கு திரும்புவார்கள் என்று சரத் பவார் நம்பிக்கை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்..