கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களின் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்வது கோவை குற்றாலம். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலா தலம் உள்ளதால் இங்குள்ள இயற்கை அழகினையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம். தற்போது கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், கோவை குற்றாலத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வனத்துறையினர். அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனர். அதில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.