திருவண்ணாமலை மாவட்டம் கீழக்கடுங்காவலூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கீழக்கடுங்காலூர் கிராமத்தில் சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வந்த தேவன் என்ற இளைஞர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற தேவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அப்பொழுது தேவனின் பைக் மற்றும் அவரது செருப்பு, செல்போன் முதலியவை ரத்த கரையுடன், விளாங்காடு கூட்டுச் சாலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று மாலை சாலை மறியலில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, காலையில் விளங்காடு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் தேவனின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் மூன்று பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகராறு ஏற்பட்டதால், தேவனை அடித்து கொன்று கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.