பிரபல WWE வீரர் கிரேட் காளி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மல்யுத்த விளையாட்டு போட்டியான WWE மூலம் பிரபலமானவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காளி. ‘தி கிரேட் காளி’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இவர், பஞ்சாபில் உள்ள சுங்கச்சாவடி ஒன்றை காரில் கடக்க முயன்ற போது, அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த காளி, சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே, பஞ்சாப் மாநில காவல்துறையில் காளி பணியாற்றி இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவில் இணைந்த கிரேட் காளி, பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.