அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் தரப்பு முறையீடு செய்த நிலையில், தற்போது ஓபிஎஸ் தரப்பும் முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவர் வந்த பிரச்சார வாகனத்தில் ஏற்றினர். இதையடுத்து, அங்கு பெரும் பதற்றம் நிலவியதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதற்கிடையே, அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலக சீலை அகற்றும் முறையீட்டை நாளை விசாரிப்பதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிடக்கோரியும், உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும் ஓபிஎஸ் தரப்பு தகவல் அளித்துள்ள நிலையில், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.