மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் புக் செய்தவுடன், இருக்கும் இடத்திற்கே சென்று கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்து வருவதாக மதுரை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மதுரை மாநகரம் முழுவதும் காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது, தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மார்க்கெட் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 மாணவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்களிடம் சுமார் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் ஒருவர் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிஷோர், தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சந்தோஷ் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கேட்பவர்களுக்கு நேரில் சென்று கஞ்சா பொட்டலங்களை விநியோகம் செய்து பணம் பெற்று வந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.