பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் கடந்த 11-ம் தேதி, அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பு மாறி மாறி முறையிட்டுள்ளது.. இபிஎஸ் முடிவு பொதுக்குழு முடிவுகளை அங்கீரிக்க வேண்டும், ஓபிஎஸ் அதை அங்கீகரிக்க கூடாது என்று கூறியுள்ளது.. இந்த சூழலில் வரும் 17-ம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது..
இதனிடையே எதிர்க்கட்சி துணைத்தலைவராக வேறு யாரையாவது நியமித்தால் ஏற்கக்கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்திருந்தார்.. இதுதொடர்பான கடிதத்தையும் அவர் சபாநாயகருக்கு அனுப்பி இருந்தார்..
இந்நிலையில் சபாநாயகர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் பரிசீலனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.. ஓபிஎஸ் உதவியாளரிடம் இருந்து கடிதம் வந்தது எனவும், வேறு யாரிடம் இருந்தும் எந்த கடிதமும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்..