பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருமாறு இதுவரை எந்த மாநிலங்களும் பரிந்துரை செய்யவில்லை என மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரி விதிப்பால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை அதிகமாக உள்ளது என்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா? எனவும் இதனுடைய வரியைச் சீராக அமைக்க ஜிஎஸ்டி திட்டத்தின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதற்கு மத்திய அரசுத் திட்டம் வைத்துள்ளதா? என்றும் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ”உலகளாவிய சந்தையில் நிர்ணயம் செய்யப்படும் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலைகளை நிர்ணயம் செய்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய நிதித்துறை அமைச்சகம் அவ்வப்போது மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் கலால் வரியைக் குறைத்து வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குள் கொண்டு வருவதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் இதுவரை மத்திய நிதித்துறை அமைச்சகத்திற்கு எந்த பரிந்துரையும் வழங்கவில்லை. அதற்கான காரணம் இதுவரை எந்த மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்குப் பரிந்துரை செய்யவில்லை”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.