கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியதை அடுத்து, சேலம் மாநகர மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வன்முறை வெடித்தது. பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பொருட்களை சூறையாடியதோடு, பள்ளி வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களையும் தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மகளின் இறப்புக்கு பின்னால் பள்ளியில் ஆசிரியர்கள் மர்மம் நிறைந்துள்ளதாக மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். மேலும், உண்மை வெளியே வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர் சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நீதி கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதுகுறித்து காவல்துறையினருக்கு தெரியவந்ததும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சேலம் மாநகர மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி நிலையங்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், ரயில்நிலையம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக தனியார் கல்லூரி மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.