செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்துள்ள திருக்கச்சூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் நிரோஷா (20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் மூன்றாம் வருடம் படித்து வருகிறார்.
இவரை, மாரிமுத்து தினந்தோறும் திருக்கச்சூரில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வரை தனது பைக்கில் அழைத்துச் சென்று ரயில்வே ஸ்டேஷனில் விடுவது வழக்கம். மாணவி நிரோஷா அங்கிருந்து மின்சார ரயிலில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். எப்பொழுதும் போல் இன்றும் தனது மகளை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு மாரிமுத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா, யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற விரைவு மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே பேலிஸார், நிரோஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிரோஷாவின் பையில் தனது தற்கொலை குறித்து கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடிதத்தை கைப்பற்றிய ரயில்வே போலீசார், தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.