ஓபிஎஸ் மகன் தேர்தலில் வென்றால் அரசியலுக்கு முழுக்கு போடுவதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்..
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.. இதே போல் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டார்.. மேலும் ஓபிஎஸ் இடம் இருந்த எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, அந்த பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது..
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் முறையிட்டு வருகின்றனர்.. எனினும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது தெரியவரும்.. இதனிடையே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்..
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஓ.பன்னீர்செல்வத்தையும், அவரது மகனையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.. அதிமுகவின் உண்மை தொண்டர்களின் உழைப்பால் தான் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியானார் என்றும்.. இப்போது தேர்தல் நடத்தி ஓபிஎஸ் மகன் வெற்றி பெற்றால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்வதாக ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். மேலும் ஓபிஎஸ் சிரிப்பு, துரோக சிரிப்பு என்றும் அவர் சுயநலத்திற்காக போராடியவர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.. ஓபிஎஸ்-க்கு எங்கும் வேலை இல்லை என்பதால் எங்கு செல்லப் போகிறார் என தெரியவில்லை என்றும் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.. அதிமுக அலுவலகத்தை சூறையாடிய ஓபிஎஸ்-ன் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும்..? என்றும் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.