மேற்கு வங்கத்தில் வேனில் பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் சிதால்குச்சி பகுதியைச் சேர்ந்த 26 பேர் வேன் ஒன்றில் ஜல்பேஷ் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சென்ற வாகனம் மேக்லிகஞ்ச் பகுதிக்குச் சென்றபோது திடீரென மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, வாகனத்தை ஓட்டியவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மின்சாரம் தாக்கியதால் காயமடைந்த 16 பேரை, ஜல்பைகுரி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தின் பின்பறத்தில் இருந்த ஜெனரேட்டரில் இருந்து உருவான மின்சாரம் தாக்கியதால் இந்த விபத்து நேரிட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வாகனத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.